நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

🕔 December 10, 2015
Wijedasa rajapaksa - 012நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினருடன், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குடும்பம் சகிதம் அமெரிக்காவில் சுற்றுலாப் பயணம் சென்ற போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்களை பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில்,  மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபா வருமானம் பெற்றதாக எவன் கார்ட் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயினும், இந்த நிறுவனம் சட்டபூர்வமாகவே செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதால், சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இழந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அதேவேளை, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும், எவன்ட் கார்ட் நிறுவனத்துக்குச் சார்பாகவே கருத்து வெளியிட்டு வருவதுடன், இந்த விவகாரம் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷவைக் கைது செய்யக் கூடாது என்று, தானே வலியுறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க  ஆகியோர் மீதும், சரத் பொன்சேகா மீதும், எவன்ட் கார்ட் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு எதிராக, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த சரத் பொன்சேகா  – நீதியமைச்சருக்கும், எவன் கார்ட் நிறுவனத் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் குறித்து, இன்று வியாழக்கிழமை படங்களுடன் ஆதாரங்களை வெளியிட்டார்.

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், விஜேதாச ராஜபக்ஷ குடும்பத்தினரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டிஸ்னிலான்டுக்கு 2006ஆம் ஆண்டு ஜனவரி 04ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்ததைக் காட்டும் படங்களை சரத்பொன்சேகா பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த சுற்றுலாப் பயணத்துக்காக இவர்கள் பயன்படுத்திய 20 அடி நீளமான ‘லிமோஸ்’ ரக படகுக் காரில் எடுக்கப்பட்ட படங்களையும், இரு குடும்பத்தினரும் ஒன்றாக உணவருந்தும் காட்சிகள் அடங்கிய படங்களையும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.

மேஜர் சேனாதிபதியும், விஜேதாச ராஜபக்ஷவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இதனால் எவன்ட் கார்ட் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு, நீதியமைச்சரான விஜேதாஸ முயற்சிப்பதாகவும்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேஜர் சேனாதிபதியுடன், தான் ஒரு தடவை மாத்திரம் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், நேரில் சந்தித்ததில்லை என்றும் கூறிய சரத் பொன்சேகா, தனக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்றும் கூறினார்.

அவ்வாறு ஏனையவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவதாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச வழங்க முன்வந்த 2000 மில்லியன் ரூபாவையும், 100 ஏக்கர் தென்னந் தோட்டத்தையும் நிராகரிக்காமல் பெற்றுக் கொண்டிருப்பேன் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.Wijedasa rajapaksa - 014Wijedasa rajapaksa - 015Wijedasa rajapaksa - 013Wijedasa rajapaksa - 016

Comments

புதிது பேஸ்புக் பக்கம்