கடைசி மனிதன்

🕔 December 9, 2015

Article - 47 - 01
ண்பத்து நான்காவது வயதில் அந்தக் கடைசி மனிதன் இறந்து விட்டார். அவர் பிறந்த மண்ணும், மக்களும் அவரை எப்போதும் முதல் மகனாகவே மதிக்கின்றனர். ஒல்லியான தோற்றமும், சாந்தமான முகமும் கொண்ட அந்த மனிதரைக் காட்டி, அவரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றிக் கூறினால், யாரும் அத்தனை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அந்தக் கடைசி மனிதனுக்கு மசூர் மௌலானா என்று பெயர்.

“வாப்பா ஒரு நாளும் எங்களுடன் கோபப்பட்டது கிடையாது. உம்மாவுடன் அதீத பாசமாக இருந்தார். மிகக் கடுமையாக நோயுற்று படுக்கையில் இருந்த தருணங்களிலும், உம்மாவை பெயர் சொல்லி அழைத்துக் கொண்டேயிருப்பார். உம்மாவை விட்டும், வாப்பா ஒருபோதும் தனியாக தூங்கியது கிடையாது” என்று, தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் – மசூர் மௌலானாவின் மகன் இல்ஹாம் மௌலானா.

போராட்டம் என்பது கோபத்திலிருந்து பிறப்பதில்லை என்பதற்கு, அந்தக் கடைசி மனிதர் சாட்சியாக இருந்தார்.

சட்டம் மற்றும் நீதித் துறையில் பயணப்பட்டிருக்க வேண்டிய மசூர் மௌலானாவை, அவரின் போராட்ட குணம் – அரசியல் களத்துக்குள் திருப்பி விட்டது.

1954 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்குள் ஒரு மாணவனாக நுழைந்தார் மசூர் மௌலானா. அவரின் சக மாணவர்களாக தற்போதைய ஓய்வுபெற்ற நீதியரசரும், வட மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி என்று – பலர் இருந்தனர். சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் தலைவராகவும் மசூர் மௌலானா இருந்தார். அந்தப் பதவியை வகித்த முதல் முஸ்லிம் மாணவர் – இந்தக் கடைசி மனிதர்தான்.

அவரின் ஊரில், கல்லூரியில், அவருடைய வாழ்க்கையின் அநேகமான தருணங்களில் முதல் மனிதராக மதிக்கப்பட்ட மசூர் மௌலானா, எங்கனம் கடைசி மனிதராகிப் போனார்?

இலங்கையில் இப்போது இருக்கும் நாடாளுமன்ற முறைமையானது 1971 ஆம் ஆண்டுக்கு முன்னர் வேறு வகையில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றத்தில் இரண்டு சபைகள் இருந்தன. ஒன்று: மேல்சபை மற்றையது: கீழ்சபை ஆகும். மேல் சபைக்கு ‘செனட் சபை’ என்று பெயர். நல்ல தமிழில் மூதவை என்பர். கீழ்சபை என்பது கிட்டத்தட்ட இப்போதிருக்கும் நாடாளுமன்ற சபைக்கு ஒப்பானது. இதனை பிரதிநிதிகள் சபை என்றும் அழைப்பர்.

கீழ் சபைக்கான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவானார்கள். மேல் சபைக்கான உறுப்பினர்கள் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

மேல் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேல் சபை உறுப்பனர்களில் 15 பேர் – கீழ்சபை பிரதிநிதிகளால் விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிகுதி 15 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

மேல் சபையான செனட் சபைக்கு, கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை விடவும் அதிகாரம் குறைவாகும். ஆனாலும், கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்ட மூலங்கள், மேல் சபையின் அங்கீகாரத்தினைப் பெற்றதன் பின்னரே சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, இலங்கை நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபை 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததையடுத்து, 1971 ஆம் ஆண்டு செனட் சபை முறைமை இல்லாமல் செய்யப்பட்டது.

இலங்கை செனட் சபை உருவாக்கப்பட்டதில் இருந்து, அது இல்லாமலாக்கப்படும் வரையிலான 24 வருடங்களில், 10 முஸ்லிம்கள் அந்த சபையில் உறுப்பினர்களாகப் பதவி வகித்திருந்தனர்.

01) சேர். முஹம்மது மாக்கான் மாக்கார்
02) எம்.எம்.ஏ. அஸீஸ்
03) ஹுசைன் ஆதம் அலி
04) ஏ.எம். ஹாமீம்
05) எம்.டி. கிச்சிலான்
06) ஐ.ஏ. காதர்
07) சேர். ராசிக் பரீத்
08) எம். சம்ஸ் காசிம்
09) எம்.எம்.எச். மஷுர்
10) எஸ்.இசட்.எம். மசூர் மௌலானா
ஆகியோர், இலங்கையில் செனட்டர்களாக பதவி வகித்த முஸ்லிம்களாவர்.

இவர்களில் இப்போது எவரும் உயிருடன் இல்லை. கடைசியாக இருந்தவர் மசூர் மௌலானா. அந்தக் கடைசி மனிதனும் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் மரணித்து விட்டார்.

1967 ஆம் ஆண்டு செனட்சபை உறுப்பினராக மசூர் மௌலானா நியமிக்கப்பட்டார். செனட்சபை உறுப்பினராகப் பதவி வகித்த கல்குடா எம். மாணிக்கம் என்பவர் மரணமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மசூர் மௌலானா தமிழரசுக் கட்சி சார்பாக நியமனமானார்.

செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்படும் ஒருவர் ஆகக் குறைந்தது 35 வயதைக் கொண்டிருத்தல் வேண்டும். மசூர் மௌலானா செனட்டராக நியமிக்கப்பட்ட போது, அவருக்கு 35 வயதுதான் ஆகியிருந்தது. இதனால், இளம் வயதில் செனட்டாகப் பதவி வகித்த பெருமையும் இவருக்கு உள்ளது.

ஆனாலும், 33 நாட்கள் மட்டுமே அவர் செனட்டாகப் பதவி வகித்தார்.

தமிழரசுக் கட்சியுடன் மசூர் மௌலானாவுக்கு பாடசாலைக் காலத்திலிருந்தே தொடர்புகள் ஏற்பட்டதாகச் சொல்கிறார் அவரின் சகோதரியின் மகனான, மருமகன் எம்.எம்.ஏ. முஹைமீன். இந்தத் தொடர்பு, மசூர் மௌலானாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மிக அன்புக்குரியவராகவும், தமிழரசுக் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலை வரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த தமிழரசுக் கட்சி மாநாட்டில் மௌலானவுக்கு வழங்கப்பட்ட கௌரவம் இன்னும் எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த மாநாட்டைப் பார்ப்பதற்காக எனது நண்பருடன் சென்றிருந்தேன். அங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலமொன்று இடம்பெற்றது. மாநாட்டுக்கு சகல தமிழ் தலைவர்களும் வந்திருந்தனர். ஆனால், அலங்கரிக்கப்பட்ட ஊர்வல வாகனத்தில் தந்தை செல்வாவுடன் மௌலானா மட்டுமே அமர்ந்திருந்தார். மற்றவர்கள் வேறு வாகனத்தில் பவனி வந்தார்கள். அந்தக் காட்சியை நினைத்தால் இன்னும் புல்லரிக்கின்றது” என்று, மௌலானா குறித்த அனுபவமொன்றினை ‘விடிவெள்ளி’ என்கிற நூலில் பதிவு செய்திருக்கிறார், மருதமுனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எல். மீராமுகைதீன்.

தமிழரசுக் கட்சியில் இணைந்திருந்த காலத்தில், தமிழ் தலைவர்களுடன் இணைந்து மசூர் மௌலானா பல்வேறு அரசியல் ரீதியான சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து, தமிழுக்கு சம உரிமை கோரி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தில் மசூர் மௌலானா – தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டமை வரலாற்றுப் பதிவாகும்.

“தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை, அப்போது பாதுகாப்புப் படையினர் மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். அதில் மௌலானாவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரைக் கைது செய்த பாதுகாப்பு படையினர், பனாகொட முகாமில் ஆறு மாதங்கள் சிறை வைத்தனர்” என்கிறார் மசூர் மௌலானாவின் மருமகன் முஹைமீன்.

மௌலானாவின் இவ்வாறான தீவிர அரசியல் செயற்பாடுகள் காரணமாக அவரின் சட்டக் கல்லூரிப் படிப்பு இடையில் நின்றுபோனது.

தமிழரசுக் கட்சி சார்பில் 1960 ஆம் ஆண்டு, முதன் முதலாக மசூர் மௌலானா பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். கல்முனைத் தொகுதியில் எம்.எஸ். காரியப்பர் என்கிற அரசியல் ஜாம்பவானுக்கு எதிராக மௌலானா களமிறங்கியிருந்தார். இந்தத் தேர்தலில், முஸ்லிம்களோடு இணைந்து தமிழர்களும் மௌலானாவை ஆதரித்தார்கள். ஆயினும், 212 எனும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மசூர் மௌலானாவின் வெற்றி வாய்ப்பு அந்தத் தேர்தலில் நழுவிப்போனது.

இதன் பின்னரும், அவர் நாடாளுமன்றத் தேர்தல்கள் சிலவற்றில் போட்டியிட்டார். ஆனாலும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. 491 மற்றும் 1254 என்கிற சிறிய தொகை வாக்கு வித்தியாசங்களில் அவர் தோல்வியடைய நேரிட்டது. மசூர் மௌலானாவை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்றுக் கொள்ளத் துடித்த அவரின் சொந்த ஊரான மருதமுனையின் கனவு, கடைசிவரை பலிக்கவேயில்லை. அது கசப்பானதொரு வரலாறாகும்.

ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒப்பான பல சேவைகளை, ஒரு கிராம சபைத் தலைவராக இருந்து, மசூர் மௌலானா செய்து காட்டினார். கிராம சபை என்பது – இப்போதுள்ள பிரதேச சபைக்கு ஒப்பான உள்ளுராட்சி மன்றமாகும். 1966 ஆம் ஆண்டு தொடக்கம் 1972 ஆம் ஆண்டு வரை, இரண்டு முறை தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு, கரைவாகு வடக்கு கிராம சபைத் தலைவராக மௌலானா பதவி வகித்திருந்தார்.

மசூர் மௌலானா கிராம சபைத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில்தான், அவரின் சொந்த ஊரான மருதமுனைக்கு மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுத்தார். அந்த வகையில், சொந்த மண்ணுக்கு ஒளியூட்டிய அரசியல் தலைவராக மருதமுனை வரலாற்றில் அவர் பதிவு செய்யப்படுகிறார்.

பேதங்கள் பாராது, மௌலானா இவ்வாறு ஆற்றிய சேவைகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் மசூர் மௌலானா பதவி வகித்திருந்தார். அந்தப் பதவிக்கு அவரை ஐ.தே.கட்சி நியமித்தது.

தமிழரசுக் கட்சியுடன் பயணித்த மசூர் மௌலானா, ஐ.தே.கட்சிக்குள் எப்படி வந்தார் என்பதற்குப் பின்னால், கசப்பு நிறைந்த ஒரு கதை இருப்பதாகக் கூறப்படுகிறது.

மசூர் மௌலானாவின் சொந்த ஊரான மருதமனைக் கிராமத்தின் வரலாற்றினைப் பதிவு செய்யும் ‘மாண்புறும் மருதமுனை’ எனும் நூலில், அந்த நூலின் தொகுப்பாசிரியரான முன்னாள் வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர். அப்துல் சத்தார் அந்தக் கசப்பான கதையினைப் பதிவு செய்துள்ளார்.

‘பெரிய நீலாவணைப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரால் 1969 ஆம் ஆண்டு, மருதமுனையைச் சேர்ந்த மீராமுகைதீன் எனும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பாரிய கலவரம் ஏற்பட்டது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மருதமுனை இளைஞரைச் சுட்டவர் இனங்காணப்பட்டு, அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தேக நபர் சார்பாக, தமிழரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆஜராகி வழக்காடினார். அந்த வழக்கில் அமிர்தலிங்கத்தை ஆஜராக வேண்டாம் என்று, அப்போது மசூர் மௌலானா கேட்டுக் கொண்டார். அதையும் மீறியே அமிர்தலிங்கம் ஆஜரானார்.

இந்தச் சம்பவம்தான் தமிழரசுக் கட்சிக்கும் மசூர் மௌலானாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக் காரணமாயிற்று. இந்த விரிசலைப் பயன்படுத்திக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியானது, அப்போதிருந்த அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான டட்லி சேனநாயக்கவின் ஆலோசனையின் பேரில், மசூர் மௌலானாவை உள்ளிழுத்துக் கொண்டது’ என்று மான்புறும் மருதமுனை நூலில் அப்துல் சத்தார் எழுதியுள்ளார்.

ஆனாலும், தமிழ் தலைவர்களுக்கும் மசூர் மௌலானாவுக்கும் இடையிலான அன்பும், உறவும் – அவர் மரணிக்கும் வரை இருந்துள்ளது. அந்த உறவுபற்றி அவருடைய மகன் இல்ஹாம் மௌலானாவுடன் பேசும் போது தெரிந்து கொள்ள முடிந்தது.

மௌலானாவின் பிந்திய அரசியல் பயணத்தில், அவர் முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து கொண்டார். அதனால், கல்முனை மாநகரசபையின் மேயராகப் பதவி வகிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அவருடைய வாழ்நாளில் அவர் வகித்த பதவிகள் அதிகமானவை.

மௌலானா மக்களால் நேசிக்கப்பட்டார். அவரின் சொந்த ஊரான மருதமுனை மக்கள் அந்த மனிதரை எல்லையற்று நேசித்தனர். அரசியலில் நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த போதும், தனக்கென்று மௌலானா ஒரு சொந்த வீடு, வாகனம் என, எதையும் கடைசி வரை சேர்த்து வைக்கவில்லை என்கிறார் அவரின் மகன் இல்ஹாம்.

இனி, மசூர் மௌலானா இல்லை. இலங்கையின் செனட்டர்களாகப் பதவி வகித்த முஸ்லிம்களில் கடைசி மனிதன் மரணித்து விட்டார். ஆனால், இலங்கையின் அரசியலுக்குள் பயணிக்கும் ஒவ்வொருவரும், மசூர் மௌலானாவை ஏதோவொரு இடத்தில் சந்தித்தே ஆகவேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அந்தக் கடைசி மனிதன், தவிர்க்க முடியாத ஒரு மைல் கல்லாக இருக்கிறார்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (08 டிசம்பர் 2015)Article - 47 - 03Article - 47 - 02Article - 47 - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்