பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

🕔 November 6, 2021

புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியிலுள்ள குப்பை கிடங்கில் பயணப்பை ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்புகஸ்கந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

குறித்த பெண் அணிந்திருந்த சுமார் 08 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெண் மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவர் என நேற்று அடையாளம் காணப்பட்டார்.

அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் சடலத்தை ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பார்வையிட்டதன் பின்னர் சடலம் இனங்காணப்பட்டது.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்ற இந்தப் பெண், கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டிலிருந்து மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதனை அவரது  உறவினர் ஒருவர் அவதானித்துள்ளதுடன், வெளியில் சென்ற தனது மனைவி வீடு திரும்பாத காரணத்தினால் காணாமல் போன பெண்ணின் கணவர்,  இறுதியாக முச்சக்கர வண்டியில் தனது மனைவியுடன் சென்ற பெண்ணையும் அழைத்துக்கொண்டு கடந்த முதலாம் திகதி ப்ளூமெண்டல் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

ப்ளூமெண்டல் – வோல்ஸ் லேன் பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து குறித்த பெண் இறங்கியுள்ளார்.

உயிரிழந்த பெண் வட்டித் தொழில் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்