வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை

🕔 October 29, 2021

டமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கும் நீதிமன்றம் மேலும் ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆளுநர் ராஜா கொல்லுரே தாக்கல் செய்த வழக்கை அடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண அலுத்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு நொவம்பர் 12ம் திகதி வரை அமலில் இருக்கும்.

மனுதாரர் தனது மனுவில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவர் வீரசுமண வீரசிங்க, பொதுச் செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்க, கட்சியின் அமைப்பாளர் எஸ். விஜேசிங்க, பதில் பொருளாளர் பிரேமதர திஸாநாயக்க மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் டி.இ.டபிள்யூ. குணசேகரே ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 24, 2021 திகதி நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில், இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு மாறாக நியாயமான விசாரணையின்றி கட்சித் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக வாதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கட்சி அமைப்புக்கு முரணாக சட்டவிரோதமான முறையில் தான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மனுதாரர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் போது பணிக்கு வரத் தவறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஆசிரியர்களைப் பற்றி அவர் கூறியதைத் தொடர்ந்து, தான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை செயலிழந்துள்ள காலப்பகுதியில் மாகாணத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும், மாகாண ஆளுநராகவும் இருந்து தான் இந்தக் கருத்துக்களை வெளியிட்டமையினால், தன்னை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சிக்கு அதிகாரம் இல்லை எனவும் கொல்லூர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதிவாதிகள் தமக்கு எதிராக நியாயமான ஒழுக்காற்று விசாரணையை நடத்தத் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் எப்போதும் இயற்கை நீதிக்கு முரணாகவே செயற்படுவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்