பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

🕔 December 4, 2015

Registar - Satthar - 01– முன்ஸிப் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் கையொப்பமிட்டு, கடந்த மாதம் 24 ஆம் திகதி பொறியியல் பீடத்தின் சகல மாணவர்களையும் வழமையான வகுப்பு நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு அழைப்புவிடுத்து, ஒவ்வொரு மாணவருக்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருந்ததாகவும் பதிவாளர் சத்தார் சுட்டிக்காட்டினார்.

பொறியியல் பீட பீடாதிபதி, மாணவர்களுக்கு அனுப்பி வைத்த அந்தக் கடிதத்தில்; 2012 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடமானது, முதலாம் ஆண்டு கற்கை நெறிகளுக்கான ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகள் முழுவதையும், விசேட கற்கை நெறிகளுக்கான ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகளில், இரண்டாம் வருடத்துக்குரிய பெரும்பாலானவற்றினையும் பூர்தி செய்துள்ளதாகவும், மற்றைய இரண்டு வருடங்களுக்குரிய ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, ‘சில மறைமுக சக்திகளின் பின் தூண்டல்களினால் முன்வைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்துக்கு எதிரான கருத்துக்களால், பல்கலைக்கழகத்துக்காக இரவு பகல் பாராமல் பாடுபடுகின்ற ஊழியர்களின் மனங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நடந்து விடவில்லை’ என்றும், பொறியியல் பீட பீடாதிபதி அனுப்பி வைத்த அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்கண்டவாறான நடவடிக்கைகளுக்கு மத்தியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும், உயர் கல்வி அமைச்சினதும் உதவியினால் பின்வரும் நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1. விசேட நடவடிக்கைகள் மூலம், வளர்ச்சி பெற்ற பொறியியல் பீடங்களிலிருந்து விரிவுரையாளர்களை பெற்றுத் தந்து, தொடர்ச்சியாக எமது பீடத்தில் தங்கியிருந்து பணியாற்றச் செய்து, கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து செயற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை.

2. மூன்றாம், நான்காம் வருட விசேட கற்கை நெறிகளுக்குத் தேவையான உசாத்துணை நூல்களை உடனடியாக கொள்வனவு செய்ய போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை.

3. ஆய்வுகூட வசதிகளை துரிதமாக விருத்தி செய்ய, மேலதிகமாக 60 மில்லியன் ரூபாய் நிதி உதவியை உடினடியாக அளித்தமை.

4. முடிவுறும் தறுவாயிலுள்ள நான்கு மாடி ஆய்வுகூட கட்டிடப் பணிகளை, மேலும் துரிதப்படுத்த பணிப்புரை விடுத்துள்ளமை.

எனவே, மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் பல்கலைக்கழகமும், பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மற்றும் உயர் கல்வி அமைச்சும் விசேட கவனம் செலுத்தி, பொறியியல் பீடத்தினை அபிவிருத்தி செய்து வரும் சூழ்நிலையில், வதந்திகளை நம்பி, மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையினை மேலும் காலம் தாழ்த்தாது, வகுப்பு பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்கு டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் திரும்புமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

இருந்தபோதிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் எவரும் இதுவரை தமது வகுப்புகளுக்குத் திரும்பவில்லை என, பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் சத்தார் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பொறியியல் பீடத்துக்கான விரிவுரையாளர்கள், கடமைக்குச் சமூகமளித்துள்ளதாக பதிவாளர் கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருடத்தில் 92 மாணவர்களும், இரண்டாம் வருடத்தில் 99 மாணவர்களும், மூன்றாம் வருடத்தில் 93 மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்