பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல்
‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஊடாக பெயர் வெளியிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு – சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
‘பன்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி விசாரணை நடத்தவும், விசாரணை குறித்த அறிக்கையை ஒரு மாதத்தினுள் சமர்ப்பிக்கவும் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சகோதரி முறையான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் பல்வேறு முறையற்ற வகையில் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களைக் கொண்டிருப்பதற்காக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் (ICIJ) வெளியிடப்பட்ட ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனும் ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை (08) லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடேசன், ‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஆவணத்தில் அவருடன் தொடர்புடைய வெளிப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
திருக்குமரன் ஜனாதிபதிக்கு கடிதம்
‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் தனது பெயரும், மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
தாமதமின்றி சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்து, தனது மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.