சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு

🕔 September 29, 2021

சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து சேதனப் பசளையினை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) அறிவித்துள்ளார்.

பசளை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட பசனை மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதும், அதில் பக்ரீரியாக்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று, கமநல பணிப்பாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சீன நிறுவனத்திடமிருந்து எந்தவொரு சேதனப் பசளையினையும் பெற்று – நாட்டுக்குள் இறக்குமதி செய்வதில்லை எனும் தீர்மானத்தில் கமநலத் திணைக்களம் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த சீன நிறுவனம் – வரையறுக்கப்பட்ட கிங்டாவோ சீவின் பயோடெக் குழும நிறுவனம் (Qingdao Seawin Biotech Group Co. Ltd) என அறியப்படுகிறது.

மேற்கூறப்பட்ட பசளை மாதிரியில் ‘எர்வினியா’ (Erwinia) எனும் நுண்ணுயிரி இருப்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியாது என்று கூறிய அஜந்த டி சில்வா; இந்த புதிய மாதிரியில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியா இருப்பதை உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

“சேதனப் பசளையினை வழங்க சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்ட கமநலத் திணைக்களப் பணிப்பாளர்; “தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாவைக் கொண்டுள்ள சேதனப் பசளையினை நாட்டிற்குள் கொண்டுவர கமநலத் திணைக்களம் அனுமதிக்காது” என்றும் கூறினார்.

முன்னதாக செப்டம்பரில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே; ‘எர்வினியா’ என அடையாளம் காணப்பட்ட நுண்ணுயிர்கள் இலங்கைக்கு ‘அதிகாரப்பூர்வமற்ற முறையில்’ கொண்டுவரப்பட்ட சேதனப் பசளை மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்