தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

🕔 September 12, 2021

லங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி – இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டுத் தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மேலும் 07 மனித உரிமைகள் சார் நிபுணர்களுடன் இணைந்து – ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் 08 ஆம் திகதி கடிதமொன்றை எழுதியிருந்தேன்.

இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார். அவர் வெறுப்புணர்வுப் பேச்சுக்களுக்கு எதிரான வலுவான செயற்பாட்டாளராக இயங்கியதுடன் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்துக்க எதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக முக்கிய பல வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்ததுடன், அதில் அவர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், அவர் சட்ட உதவியை நாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தோம். இருப்பினும் அதற்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச்சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக – அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை பயன்படுத்தப்படக்கூடும் என்று நாம் நம்புகின்றோம். 

அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விசாரணைகள் என்பன அடிக்கடி மாற்றப்படுகின்றமையும் அவருக்கெதிராகப் பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு சில சாட்சியங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளமையும் இந்த சந்தேகம் வலுப்பெறுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி ஒரு சட்டத்தரணி என்றவகையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் மனித உரிமைசார் செயற்பாடுகளும் அவரைத் தவறுதலாகத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதுடன், அச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட வலியுறுத்துகின்றோம்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்