ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் இவர்கள் ஆஜராக வேண்டியுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்த அடிப்படை சாட்சியங்களை விசாரணை செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எவன்ட் கார்ட் நிறுவனமானது, ரக்னா லங்கா நிறுவனத்தின் இணை நிறுவனமாக நடத்தப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கலில் ஈடுபட்டமை ஆகியவற்றின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட ஐந்து பேரை குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாக , அண்மையில் சட்ட மா அதிபருக்கு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.