புன்னகைகள் ஆட்கொல்வதில்லை

🕔 December 1, 2015

எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருடனான உரையாடல்
Article 46

‘என்னுடைய மனைவிதான் எச்.ஐ.வி.யினால் முதலில் பாதிக்கப்பட்டார். பின்னர்தான், நான் பாதிப்புக்குள்ளானமை பற்றித் தெரிய வந்தது. எனது மனைவி எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை வைத்தியர்கள் என்னிடம் கூறியபோது அதிர்ந்து போனேன். என் மனைவி வீட்டுக்குள் இருந்து வாழ்ந்தவர். அவருக்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டமையினை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று வருடங்கள் மட்டுமே அவரால் உயிர் வாழ முடிந்தது. 2005 இல் என்னுடைய மனைவி மரணித்து விட்டார்’.

சொல்லி முடித்தபோது, நஸீருடைய கண்கள் கண்ணீரால் நிரம்பிப் போயிருந்தன. குரல் தழுதழுத்தது. பேசுவதை சற்று நிறுத்திக்கொண்டார்.

நஸீர் கண்டியைச் சேர்ந்தவர். கொழும்பில்தான் வசிக்கின்றார். இப்போது 58 வயதாகிறது. சரியாக 13 வருடங்களுக்கு முன்னர் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இவர் அடையாளம் காணப்பட்டார்.

  • என்னதான் நடந்தது?

என்னுடைய மனைவி ஒரு தடவை நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்போது, தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை வழங்கினோம். அந்த சந்தர்ப்பத்தில் அருக்கு இரத்தம் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அதனை வழங்கினார்கள். அப்போது வழங்கப்பட்ட இரத்தம், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான ஒருவருடையதாக இருந்துள்ளது. அதனால், என் மனைவியும் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டுதான் என்னுடைய மனைவி எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டிருந்தமையினை அறிந்தோம். வைத்தியர்கள் என்னை அழைத்துச் சொன்னதும் அதிர்ந்து விட்டேன். பின்னர், என்னையும் பரிசோதித்துக் கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுத்தினார்கள். பரிசோதனை செய்தேன். அப்போது, நானும் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானமை தெரியவந்தது.

என்னுடைய மனைவி எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான காலத்தில் வைத்தியசாலைகளில் மருந்துகள் இருக்கவில்லை. வெளிநாட்டில் இருந்துதான் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மருந்துகள் மிக அதிக விலையுடையவையாக இருந்தன. அதேவேளை, அந்த மருந்துகளை பயன்படுத்தும் போது, சில பக்க விளைவுகள் ஏற்படும் என்று வைத்தியர்கள் கூறினார்கள். பின்னர், அப்படி ஏற்படும் பக்க விளைவுகளைக் குணப்படுத்த, இன்னும் அதிக விலையுள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

எனவே, எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக மருந்துகளை வழங்கவுள்ளதாகவும், அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் சொன்னார்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில், எனது மனைவிக்கு இலவச மருந்துகள் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தன.

ஆனாலும், ஒரு மாதம் மட்டுமே எனது மனைவி மருந்துகளை எடுத்துக் கொண்டார். அந்த மருந்துகள் அவருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தின. அதன் காரணமாக, அவர் மரணமடைந்தார்.

  • எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் ‘எயிட்ஸ் நோயாளிகள்’ என்றுதான் அடையாளப்படுத்தப் படுகின்றனர். விளம்பரங்களிலும் எலும்புக்கூடு போல் இருக்கின்ற நபர்களை மட்டுமே எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நபர்களாக காண்கிறோம். ஆனால், 13 வருடங்களாக எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகி இருக்கும் நீங்கள் நல்ல தோற்றத்துடன் சாதாரணமாக இருக்கின்றீர்கள். இது எப்படி?

நான் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டு 13 வருடங்கள் ஆகின்றன. நம்புங்கள், கடந்த 06 மாதங்களாகத்தான் நான் மருந்து உட்கொண்டு வருகிறேன். எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நிலையிலும் நான் சாதாரணமாக வாழ்ந்து வருகிறேன். காரணம், மன ரீதியாக நான் வீழ்ந்து விடவில்லை. மனதால் நான் துவண்டு போகாமல் இருப்பதும், எனது சாதாரண வாழ்க்கைக்கு ஒரு காரணமாகும்.

எச்.ஐ.வி. தொற்று என்பது தவறான பாலியல் செயற்பாடுகளினால் மட்டுமே ஏற்படுவது என்கின்ற எண்ணமும், பார்வையும் நமது சமூகத்துக்குள் இன்னும் இருக்கிறது. எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் எல்லோரும் தவறான பாலியல் தொடர்புகளை வைத்துக் கொண்டவர்கள் போல் பார்க்கப்படுகின்றனர். அது மிகப் பிழையானதொரு எண்ணமாகும். எனது மனைவி போன்றவர்களும் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான பாலியல் தொடர்புகள் எவையும் எனக்கு இருந்ததில்லை. ஆனால், நானும் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இன்னொருபுறம், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களை இன்னும் அவமானத்துக்கு உரியவர்களாகப் பார்க்கின்றவர்கள் கணிசமாக உள்ளனர். இதனால், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் குடும்பத்தவர்களே எரித்துக் கொன்றிருக்கின்றார்கள். பாதிப்புக்குள்ளான சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இருந்தாலும், இவ்வாறான சூழ்நிலைகளின் போதெல்லாம், மன ரீதியாக நான் வலிமையுடன் இருந்து வருகின்றேன்.

  • நீங்கள் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டபோது, அதை உங்கள் குடும்பத்தவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்?

எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்களை சமூகம் மிகக் கேவலமாக பார்த்தது. இப்போதும் அந்த நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை விடவும், சமூகத்திலுள்ளவர்கள் குறித்தே அதிகம் அச்சம் கொள்கின்றனர்.

எனவே – எனது குடும்பம், பிள்ளைகளின் கல்வி ஆகியவற்றினை மனதில் கொண்டு, எச்.ஐ.வி. தொற்றினால் நான் பாதிக்கப்பட்டுள்ளமையினை, ஒன்றரை வருடங்கள் வெளியில் தெரியாமல் மறைத்தேன். ஆனாலும், என்னுடைய குடும்பத்தினருக்கு மட்டும் எனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்துக் கூறினேன்.

குடும்பத்திலுள்ள ஒரு சிலர் விலகிக் கொண்டார்கள். என்னிடமிருந்து அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றி விடும் என்று அவர்கள் பயந்தார்கள். இது இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது. இப்போது, என்னிடமிருந்து விலகியவர்கள் முன்புபோல் நெருக்கமாகவும், உறவோடும் உள்ளனர். எச்.ஐ.வி. பற்றிய தெளிவு இல்லாமையினால்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.

  • உங்கள் பிள்ளைகளைப் பற்றி சொல்லுங்களேன்.

எனக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவருக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றார்கள். இரண்டாமவருக்கு அண்மையில்தான் தொழில் கிடைத்தது. மற்றையவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளிடம் அவர்களுடைய தயார் இறந்தமைக்கான காரணம் குறித்தும், நான் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றியும் சிலகாலம் சொல்லாமல் இருந்தேன்.

என்னுடைய மூத்த மகன் க.பொ.த. சாதாரண தரம் பரீட்சை எழுதிய பிறகுதான் அவருடைய தயார் எச்.ஐ.வி. பாதிப்பு காரணமாக மரணித்தார் என்பதைக் கூறினேன். அவர் மிகவும் கவலையடைந்தார். ஆனால், மனரீதியாக அவர் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன்.

என்மீது அவர்களின் அன்பு குறையவேயில்லை. ஒவ்வொரு நாளும் எனது சுகத்தைப் பற்றி விசாரிக்கின்றார்கள். சாப்பிட்டீர்களா, மருந்துகள் எடுத்தீர்களா என்று அக்கறையோடு கேட்கிறார்கள். எனது குடும்பத்தவர்களும் என்மீது அக்கறையுடன் உள்ளார்கள்.

  • எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நிலையில், உடல் ரீதியாக எவ்வாறான வலிகளை உணர்கிறீர்கள்?

எந்த விதமான வலியும் எனக்கில்லை. எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பிறகு, பரிசோதனைகளை மட்டும் செய்து வந்தேன். மருந்துகள் எவற்றையும் உட்கொண்டதில்லை. கடந்த 06 மாதங்களாகத்தான் மருந்துகளை உட்கொள்கிறேன்.

என்னுடைய உடலில் வெண்குருதி சிறு துணிக்கைகள் போதுமான அளவு இருந்தன. அதனால், எனது நோயெதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தது. ஆயினும், சில காலங்களுக்கு முன்னர் செய்து கொண்ட பரிசோதனையின் பிரகாரம் வெண்குருதி சிறு துணிக்கைகளின் அளவு சற்று குறைந்திருப்பதாக வைத்தியர்கள் கூறினர். அதனால், மருந்து எடுத்துக் கொள்வது நல்லது என்றார்கள். அதன் பிரகாரம்தான் கடந்த 06 மாத காலமாக மருந்துகளை உள்கொள்ளத் துவங்கினேன். இப்போது எனது உடலில் வெண்குருதி சிறு துணிக்கைகளின் அளவு அதிகரித்திருக்கிறது.

சாதாரண ஆயோக்கியமுள்ள ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் ஏற்பட்டால், அது சுகமாவதற்கு இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறதல்லவா? ஆனால், எனக்கு அவ்வாறான சுகயீனம் ஏற்படும்போது, அவற்றிலிருந்து விடுபடுவதற்கு சில நாட்கள் அதிகமாக எடுக்கும். அவ்வளவுதான். இவற்றுக்கு அப்பால், இறைவன் வழங்கிய ஆயுட்காலம் வரை, சாதாரண வாழ்க்கையினை என்னால் வாழ முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இன்னொருபுறம், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. மனரீதியாகவும் தங்களைப் பலப்படுத்திக் கொள்தல் அவசியமாகும். ஆனால் வீட்டிலும், வேலைத் தளங்களிலும் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக்கடுமையான மன உழைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். குறிப்பாக, ஊடகங்கள் மோசமான மனப்பாதிப்பினை உருவாக்குகின்றன.

  • ஊடகங்களா? விபரமாகச் சொல்லுங்கள்?

எச்.ஐ.வி. பாதிப்பு என்பதை ‘ஆட்கொல்லி நோய்’ என்று ஊடகங்கள்தான் முதன் முதலில் குறிப்பிடத் துவங்கின. அரசாங்கமும் அவ்வாறுதான் பிரசாரம் செய்தது. அதனால், சாதாரண மக்கள் பயங்கொள்ளத் துவங்கினர். எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவரின் அருகில் இருப்பதற்கு, அவர்களைத் தொடுவதற்கு சாதாரண மக்கள் பயப்படுகின்றனர். எனவே, எச்.ஐ.வி. தொடர்பில் விழிப்பூட்டும்போது ஊடகங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

எச்.ஐ.வி. பற்றிய அச்சத்தினை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பிரசாரங்களும், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களை சமூக ரீதியாக மேலும் புறக்கணிப்புக்கு உட்படுத்தும் நிலையினை ஏற்படுத்தி விட்டது.

‘ஆட்கொல்லி நோய்’ என்கிற வாசகத்தினைப் பயன்படுத்துவதற்கு எதிராக, நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நாம் அரசாங்கத்தினை வலியுறுத்தினோம். இப்போது, அந்த வாசகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், முன்னர் அந்த வாசகம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை.

  • எச்.ஐ.வி. தொற்றுக்கான மருத்துவங்கள், அதற்கான செலவுகள் எல்லாம் நமது நாட்டில் எவ்வாறுள்ளன?

இந்த இடத்தில் நமது அரசாங்கத்துக்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னரெல்லாம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவர், குறிப்பிட்டதொரு பாதிப்பு நிலையினை அடைந்த பின்னர்தான் வைத்தியசாலைகளில் இலவசமாக மருந்துகளைப் பெற முடியும். ஆனால், 2014 ஆம் ஆண்டிலிருந்து, ஒருவர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார் என அடையாளம் காணப்பட்ட உடனேயே, அவருக்கு இலவசமாக மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

நான் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான ஆரம்ப காலத்தில் போதுமான சிசிக்சைகள் இருக்கவில்லை. மருந்துகளும் அதிகளவு விலையில் இருந்தன. 2002 ஆம் ஆண்டு, மாதமொன்றுக்கு குறைந்தது 30 ஆயிரம் ரூபாவினை வைத்தியத்துக்காக செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்த மருந்துகளை இன்று அரசாங்கம் இலவசமாக வழங்குகின்றது. இதற்காக நமது நாட்டைப் பாராட்ட வேண்டும்.

  • இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Positive women’s network என்கிற அமைப்பொன்றில் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இது எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களுக்களை ஆதரிக்கும் அமைப்பாகும்.

2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பினை நடத்தி வருகின்றோம். நாங்கள் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட போது, எமக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இருக்கவில்லை. இன்றும் கூட, எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர். எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான பலர், அவர்களின் தொழில்களை இழந்துள்ளனர். மருத்துவ தேவைகளுக்காக தலைநகருக்கு வந்து, விடுதியொன்றில் தங்குவதற்குக் கூட, பலரிடம் பணமில்லை.

இவ்வாறானவர்களுக்கு எமது Positive women’s network என்கிற அமைப்பின் ஊடாக நாம் உதவுகின்றோம். இவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றினை நாம் வழங்குகிறோம். சிலவேளை, இலவசமாகக் கிடைக்காத மருந்துகளையும் நாம் வாங்கிக் கொடுக்கின்றோம். இவர்களுக்கு இலவசமாகப் பரிசோதனைகளை வழங்குகின்றோம்.

உள்ளுர் உதவியாளர்களிடமிருந்து கிடைக்கும் நிதிகள் மற்றும் பொருள் உதவிகள் மூலமாகத்தான் இவற்றையெல்லாம் செய்கிறோம்.

எங்கள் சேவைகளைப் பாராட்டி, அமெரிக்காவிலிருந்து Red rebbon விருது 2012 ஆம் ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்டது. உலகிலுள்ள 186 தொண்டு அமைப்புக்களில் நாம் 10 ஆவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, இந்த விருது வழங்கப்பட்டது.
• • •
ன்று டிசம்பர் 01 ஆம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சனிக்கிழமையன்று, கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.

இதன்போதுதான் நஸீரை சந்திக்கக் கிடைத்தது. செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு எயிட்ஸ் தினத்தின் அடையாளமான சிவப்புப் பட்டியினை நஸீர்தான் அணிவித்தார். அப்போது, நஸீர் – எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரென, அந்தச் செயலமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.

பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய அதிகாரி டொக்டர் சத்தியா ஹேரத், அந்தச் செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, எச்.ஐ.வி. தொடர்பில் அவர் பல்வேறு தகவல்களை வழங்கினார். இறுதியில், ‘எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரை நீங்கள் கட்டியணைப்பீர்களா’ என்கிற கேள்வியுடன் டொக்டர் சத்தியா ஹேரத் தனது விளக்கவுரையினை முடித்துக் கொண்டார்.

அப்போதுான், டொக்டர் சத்தியா ஹேரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நஸீர் மேடைக்கு வந்தார். தன்னை அறிமுகம் செய்து, பேசத்துவங்கினார். தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்.

எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளானவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானம், புறக்கணிப்பு குறித்து அவர் பேசியபோது, ஒரு சக மனிதனாக நான் நொறுங்கிப்போனேன்.

நஸீர் பேசி முடித்ததும், மேடையேறிச் சென்று, அவரை ஆரத்தழுவிக் கொண்டேன். நெகிழ்சியும், மகிழ்ச்சியும் கலந்த தருணமது.

அதற்குப் பின்னர்தான், நஸீருடன் ‘தமிர் மிரர்’ பத்திரிகைக்காக உரையாடினேன்.

எங்கள் சந்திப்பினை முடித்துக் கொண்டு விடைபெறும் தருணத்தில், ‘உங்கள் படங்களை வெளியிடும்போது, அடையாளத்தை மறைக்க வேண்டுமா’ என்று கேட்டேன்.

‘அடையாளத்தை மறைக்க வேண்டாம். எனது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்தவித அவமானமும் இல்லை. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களும் சாதாரண மக்களைப் போல் சமூகத்தில் மதிக்கப்படுதல் வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாதல் என்பதில் எந்தவித அவமானமும் இல்லை. அதனால், எனது அடையாளத்தை மறைக்காமலேயே என்னுடைய படத்தை பிரசுரியுங்கள்’ என்றார்.

கை குலுக்கிக் கொண்டு, புன்னகையுடன் விடைபெற்றோம்.Article 46 - 04

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (01 டிசம்பர் 2015)

Comments