தன்பால் சேர்க்கையை குற்றமற்றதாக்க வேண்டும்: இலங்கை மனநல மருத்துவக் கல்லூரி கோரிக்கை

🕔 August 20, 2021

லங்கையில் தன்பால் சேர்க்கையை (homosexuality) சட்டவிரோதமற்றதாக ஆக்குமாறு இலங்கை மனநல மருத்துவக் கல்லூரி கோரிக்கை விடுத்துள்ளது.

தன்பால் சேர்க்கை ஒருகுற்றச் செயல் எனக் கூறும் தண்டனைச் சட்டக் கோவையின் 365 வது பிரிவை திருத்துமாறும் மேற்படி கல்லூரி அறிக்கையொன்றின் மூலம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தன்பால் சேர்க்கை என்பது மனதின் அல்லது உடலின் நோயினால் ஏற்படுகிறது என்ற கருத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்துள்ள மேற்படி கல்லூரி, நவீனகால மனநல மருத்துவர்கள் தன்பால் சேர்க்கையை ஒரு மனநோயாக அடையாளம் காண்பதில்லை என்றும், அதை அப்படி கையாளுவதில்லை எனவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மனநலம் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்தும் சில நபர்கள், பாலியல் நடத்தை குறித்து தவறான செய்திகளை பரப்புகின்றமை, தமது கவனத்துக்கு வந்துள்ளதாகவும் குறித்த கல்லூரி தெரிவித்திருக்கிறது.

தன்பால் சேர்க்கை ஒரு மனநோய் என்ற கட்டுக்கதை, நடைமுறையில் உள்ள சான்றுகள் அடிப்படையிலான அறிவியலுக்கு ஏற்ப இல்லை என்றும், மொடம் (Modem) தின மருத்துவ அறிவு மற்றும் சமூக மதிப்பீடுகளின்படி, பெண் தன்பால் சேர்கையாளர்கள் (lesbian), ஆண் தன்பால் சேர்க்கையாளர்கள் (gay), இருபால் சேர்கையாளர் (bisexual), திருநங்கைகள் (transgender), ‘இன்டர் செக்ஸ்’ (வெளிப்பாலுப்புக்கும், உள் பாலுறுப்புக்கும் இடையில் முரண்பாடுகளுடன் பிறந்தவர்கள்) மற்றும் ‘குயர்’ (LGBTICI) சமூகத்தின் வாழ்க்கை முறை தேர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் இலங்கை மனநல மருத்துவர்களின் கல்லூரி மேலும் தெரிவித்துள்ளது.

தன்பால் சேர்க்கை ஒரு குற்றச் செயல் என்று குறிப்பிடும் தண்டனைச் சட்டத்தின் 365 வது பிரிவை மாற்றுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ள இலங்கை மனநல மருத்துவக் கல்லூரி, இந்த தொன்மையான சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனவும், தன்பால் சேர்க்கை இலங்கையில் குற்றமற்றதாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்