கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

🕔 August 17, 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன் போது கூறினார்.

மருந்துகளின் பற்றாக்குறை – நாட்டில் கொவிட் நோயாளிகளின் மரணத்துக்கு இப்போது வழிவகுக்கிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

“மருந்து கிடைக்காததை சுட்டிக்காட்டி – சமூக ஊடகங்களில் பலர் கவலைகளை எழுப்பினர்.

இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் மருந்து கிடைப்பதாகவும், அது ஒவ்வொன்றும் 04 லட்சம் ரூபா தொடக்கம் 05 லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சிலர் குறிப்பிட்டனர்” எனவும் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளித்த ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன; மேற்படி மருந்து நாட்டில் கிடைப்பதாகவும், அதிகளவில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது இந்த மருந்துக்கு உலகளவில் அதிக தேவை இருப்பதாகக் கூறிய ராஜாங்க அமைச்சர்; தீவிர நிலையிலுள்ள சில கொவிட் நோயாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அதன்படி, 100 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே குறித்த மருந்து வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

‘ரொசிலிசுமாப்’ விலையுயர்ந்த ஒரு மருந்து என்று குறிப்பிட்ட அமைச்சர்; “இருந்தபோதிலும் அரசாங்கம் ஒரு குளிசையை 01லட்சம் ரூபாவுவுக்கு மேல் வாங்குவதாகவும் கூறினார்.

“இது அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் மருந்து அல்ல என்பதால், நாட்டில் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு அதிகளவு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜெயசுமன; சில உடல்நலக் கோளாறுகள் உள்ள தீவிர நோய்வாய்ப்பட்ட கொவிட் நோயாளிகளுக்கு மட்டுமே மேற்படி மருந்து வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“ஆபத்தான நிலையிலுள்ள எல்லா நோயாளிகளுக்கும் அந்த மருந்தை கொடுக்க முடியாது. ஏனென்றால் சிலர் அதை எடுத்துக்கொள்வதன் மூலம் இறக்கலாம்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்