வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம்

வரவு – செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அரசுக்குள்ளும் இது தொடர்பில் இரு வேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரியவருகிறது.
இதனால் வரவு – செலவுத்திட்டத்தில் சிறு மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி, 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள வாயு பரிசோதனைக் கட்டணத்தைத் திருத்துவது அல்லது இல்லாது செய்வது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை, பொதுநலவாய அரசியல் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள மோல்டா நாட்டுக்குச் சென்றுள்ளமையால் அவர் நாடு திரும்பியதும் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தவாரம் கூடவுள்ள வரவு – செலவுத்திட்ட செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதனை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நடத்தப்படும் வேளையில் சபையில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள நியாயமான குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி, வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.