சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு

🕔 August 12, 2021

பாலியல் தேவைக்காக 15 வயதுடைய சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட நான்கு இணையதளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 07 அன்று கைது செய்யப்பட்ட நபரிடம் கல்கிஸ்ஸ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது இந்த சம்பவம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இந்த சர்ச்சைக்குரிய சிறுவர் பாலியல் கடத்தல் வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 40 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர், வாகன சாரதிகள், விளம்பரத்தை வடிவமைத்தவர், பௌத்த பிக்கு ஒருவர், ஒரு கப்பலொன்றின் கப்டன் மற்றும் அதன் ஊழியர்கள், ரத்தினக்கல் வியாபாரி, விளம்பரத்தை வெளியிட்ட வலைத்தளங்களின் நான்கு உரிமையாளர்கள், மாலைதீவின் முன்னாள் ராஜாங்க அமைச்சர், சிறுமியை பாலியல் தேவைக்கு குற்றவாளிகள் பயன்படுத்திய ஹோட்டலின் முகாமையாளர், ஒரு பிரபல மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர், இலங்கை கடற்படையின் அறுவை சிகிச்சை நிபுணர், முன்னாள் வங்கி முகாமையாளர், மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

குற்றவாளிகள் இணையத்தில் பல விளம்பரங்களை வெளியிட்டதோடு, மூன்றாம் தரப்பினருக்கு குறித்த சிறுமியை மூன்று மாத காலத்துக்கு விற்றதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்