ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு

🕔 August 6, 2021

– தம்பி –

நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பில் தான் கொண்டுவருதவற்கு முயற்சித்த பிரேரணையை – நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் தவிசாளர் தட்டிக் கழித்து விட்டார் எனவும் அச்சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் என். தர்ஷினி குற்றஞ்சாட்டினார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அமரதாஸ ஆனந்தன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சபையின் கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களை அவர் அனுமதிப்பதில்லை எனவும் தர்ஷினி தெவித்தார்.

பிரதேச சபையின் மாதாந்த அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காக கடந்த ஜுன் மாதம் பிரேரணையொன்றினை கொண்டுவருவதற்கான அனுமதியை தான் கோரியதாகவும், ஆனால் அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்காமல் தவிசாளர் தட்டிக்கழித்து விட்டதாகவும் உறுப்பினர் தர்ஷினி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை (10ஆம் திகதி) நடைபெறவுள்ள கூட்ட அமர்வில் கேள்வியெழுப்புவதற்கான அனுமதியை தான் கோரியதாகவும், அதையும் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு தவிசாளர் மறுத்து விட்டதாகவும் தர்ஷினி கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த தவராசா கலையசரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை அடுத்து, அச்சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரும் உப தவிசாளருமான ஆனந்தன் – புதிய தவிசாளராக கடந்த வருடம் பதவியேற்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்