மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

🕔 July 1, 2021

– நூருள் ஹுதா உமர் –

ருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு மருதமுனையை லொக்டவ்ன் செய்வதென, சுகாதாரத்துறையினருடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றும் இன்றும் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அதில் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படாமையை கவனத்தில் கொண்டு முடக்கத்தை சுகாதார நிபந்தனைகளுடன் தற்காலியமாக வாபஸ் பெறுவதென தீர்மானிக்கபட்டுள்ளது.

உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் மாலை 06.00 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டு மேற்படி லொக்டவ்ன் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆயினும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்தலி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரி, கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, மருதமுனை உலமா சபையினர், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதியினர், பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்தி: மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்