தலைப்புச் செய்திகள்

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது

– பாறுக் ஷிஹான் –

கல்முனை – பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது.

சுமார் 04 முதல் 05 அடி வரை  நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை  மீனவர்கள் கண்டுள்ளனர்.

இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய இடத்துக்கு அவர்கள் வருகை தந்தனர்.

கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் இங்கு வருகை தந்திருந்திருந்தனர்.

ஏற்கனவே  அம்பாறை மாவட்டம் கல்முனை  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை, பாண்டிருப்பு  கடற்கரை பகுதிகளில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமைகள், டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள்   கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை  ஒதுங்கின.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கரையொதுங்கின.

மீட்கப்பட்ட உயிரனங்களை பகுப்பாய்வுக்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.