தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா?

🕔 June 19, 2021

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11ஆம் திகதிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்த நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புதிய பணிப்பாளராக டொக்டர் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக டொக்டர் சமிதா கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 11 அன்று கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 101 அல்ல 15 மட்டுமே என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார்.

ஜூன் 14 ஆம் திகதி பயணத் தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 11 ஆம் திகதி கொரோனா மரணங்கள் 101 பதிவாகியுள்ளதாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்