பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது விட்டால், ஜி.எஸ்.பி.ப்ளஸ் இல்லை: இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி.ப்ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் இரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதை வலியுறுத்தி, தீர்மானம் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் வழங்கப்பட்ட அதேநேரம் 40 பேர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டமானது சர்வதேச ஒழுங்கு விதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை துன்புறுத்தவும், துஸ்பிரயோகிக்கவும், பலவந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதற்கும் வழிவகை செய்வதாக அமைந்துள்ளது.
இந்த சட்டத்தை நீக்குவதற்கான நிபந்தனை அடிப்படையிலேயே, 2017ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக தீவிரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை முன்வைக்குமாறு இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீள இடம்பெறுகின்றமை தொடர்பான விடயங்கள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார செயற்பாட்டு குழுவும், ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி, போதுமான அழுத்தங்களை பிரயோகித்து இலங்கையில் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.