மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

🕔 May 28, 2021

மொரட்டுவ மாநகர சபையின் மேயர் சமன் லால் பெனாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் மேயர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு மேயர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன்னால் ‘டோக்கன்’கள் வழங்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு வைத்தியர்களை மேயர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேயர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு இவ்வாறு ‘டோக்கன்’களை வழங்கியதாக தெரியவருகிறது.

அவரது உத்தரவைப் பின்பற்ற வைத்தியர்கள் மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு பெண் வைத்தியர் ஒருவர், மேயருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். மேயர் தன்னை அச்சுறுத்தியதோடு, தனது கடமைகளைச் செய்வதைத் தடுத்ததாகவும் அந்த வைத்தியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், பொலிஸாரிடம் மேயர் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேயர் சமன் லால் பெனாண்டோ – பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்