கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கிக்கடனை பெறும் பொருட்டு, பஸ் உரிமையாளர்களினால் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, உரிய வங்கிகளுக்கு வழங்காமல், மேற்படி அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் இழுத்தடித்து வருவதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். பைறூஸ் குற்றஞ்சாட்டுகிறார்.
பஸ் உரிமையாளர்களைப் பழிவாங்கும் நோக்குடனேயே, கிழக்குமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் பைறூஸ் கூறுகின்றார்.
ஏற்னவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் பஸ் உரிமையாளர்கள் வழக்கு தாக்கல் செய்தமையினாலும், பொலிஸில் முறைப்பாடு செய்தமையினாலும், அவர்களின் ஊழல் மோசடிகளை அவ்வப்போது வெளிப்படுத்தியமையினாலும், பஸ் உரிமையாளர்களின் ஆவணங்களை வங்கிகளுக்கு வழங்காமல் கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் – இவ்வாறு இழுத்தடித்து வருவதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பைறூஸ் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் போது அதனை கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்வதும், அதனை மீறி செயற்படுகின்றவர்களை இவ்வாறு பழி தீர்ப்பதும் சரியான விடயமா என கேள்வியெழுப்பும் பைறூஸ்; இது சம்மந்தமாக கிழக்குமாகாண ஆளுநரின் செயளாளருக்கும் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கிக் கடனைப் பெறும் பொருட்டு, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பஸ் உரிமையாளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை வங்கிக்கு அனுப்பாமல், அந்த ஆவணங்களை மறைத்து வைத்துள்ள குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஸ் உரிமையாளர்கள் கோட்டுக் கொள்வதாகவும், திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு தகமையுள்ள – பொருத்தமான ஒருவரை உடனடியாக நிரந்தர நியமிப்புச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கிழக்குமாகாண ஆளுநரை கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.