இஸ்ரேல் விவகாரத்தில் எதுர்கான்; களமிறங்கியிருக்கும் இஸ்லாமிய தலைமை: சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

🕔 May 16, 2021

– ஸ்ரான்லி ராஜன் –

மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலைமை இப்பொழுது இருந்ததில்லை; ஆனால் முன்பு இருந்தது. கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை.

பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஒட்டோமன் பேரசு அல்லது உதுமானிய பேரரசு (Ottoman Empire) ஆட்சி நடந்தது. துருக்கியர் அப்படி இருந்தனர். முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்த பின்பு, அரேபியாவில் எண்ணெய் கண்டறியபட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்.

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது. அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும். நபிகள் காலம் முதல் உதுமானிய பேரரசுக் காலம் வரை, பலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர். அரேபியாவிலும் வாழ்ந்தனர். ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை. இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள். கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர். அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லூத்தர்.

ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லப்படுவதெல்லாம் வரலாற்று முரண். உதுமானியத் துருக்கியருக்குப் பின் வலுவான இஸ்லாமிய தலமை இல்லை. அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.

ஆனால் 1960களில் எகிப்தின் கேணல் நாசர் அதை கைபற்றினார். அரபுக்களின் தலைவராய் இருந்தார். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார். அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் எண்ணெய்க்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தமை – பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை.

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா – சுன்னி மோதலை உக்கிரமாக்கி – விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார். லிபிய அதிபர் கடாபிக்கு அந்த ‘அரபு தலைவர்’ ஆசை வந்தது. அவரையும் ‘புரட்சி’ என சொல்லி ஒழித்து கட்டினார்கள். இப்போது அரேபியாவில் வலுவான தலமை ஈரான். ஆனால் அவர்களிடம் பணமில்லை, வலிமையான ஆயுதமில்லை.

சவுதி மிகச் சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு. ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது.

இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கியாகும். நேட்டோவின் நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.

எதுர்கான் இஸ்லாமிய தலைவராக – பழைய உதுமானிய சாம்ராஜ்ய வாரிசாக கருதிக் கொள்கின்றார். துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள். அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது. காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார். இஸ்லாத்துக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார். ஆர்மேனியா – அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை துருக்கி கொடுத்தது.

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக துருக்கி நிற்கிறது. சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க, மிகப் பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.

உய்குர் விவகாரத்தில் சீனாவினை துருக்கி கண்டித்தது. பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி. அந்த துருக்கியின் எதுர்கான், பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார். இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று. எகிப்தின் கேணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் எதுர்கான்தான்.

அல் அக்சா மசூதியினை காக்க, துருக்கிய படைகள் அமைதிப் படையாகச் செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது. இதுவரை அமைதிப்படை அங்கு இல்லை. ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர, படை அனுப்ப முடியாது. காரணம் பல சிக்கல்கள் உள்ளன.

முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர். அவர் இன்னும் வாய்திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அவர்களும் அமைதி காக்கின்றனர். இஸ்ரேலை மீறி, அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதிப் படை அல்லது இஸ்லாமிய அமைதிப் படை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது. “பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு” என இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால் விஷயம் இன்னும் சீரியசாகியுள்ளது.

துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழக் கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌. ‘நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எதுர்கானுக்கும்’ என்பது போல் முறைக்கின்றன. ஆனால் எதுர்கான் இதை அறியாதவர் அல்ல‌. நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.

எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது. ஆனால் எதுர்கானால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வியாகும். லிபியாவின் தலைவர் கடாபியை மக்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள். அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது. லிபியா – பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது. அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள்.

பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எதுர்கானோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம். ஆனால் அதையும் மீறிய ‘தெய்வம்’ என ஒன்று உண்டல்லவா?அந்த தெய்வம்; எது நியாயமோ, எது தர்மமோ, அதைrச் செய்யட்டும்.

யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்.

Comments