ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

🕔 May 10, 2021

– பாறுக் ஷிஹான் –

ழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினை ‘பட்டா’ ரக வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை மாநகர  பிரதான வீதியால் நேற்று மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடுகிறார் என, மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, மாறுவேடத்தில் சென்ற கல்முனை பொலிஸார்  குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்  கிண்ணியா பகுதியில் இருந்து இவ்வாறு போதை மாத்திரைகளை கடத்தி தற்போது   கைதானவர், சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர் ஆவார்.

இவர் அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதை அடங்கிய மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும்  இச்சுற்றிவளைப்பின் போது  கல்முனை  தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில்   போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 590  போதை மாத்திரகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினையும், சந்தேக நபர் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார்  குறிப்பிட்டனர்.

Comments