ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம்

🕔 May 8, 2021

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாடசாலை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டசன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமையன்று மாணவர்கள் பாடசாலை வளாகத்தைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் வீதிகளில் புத்தகப் பைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களை காண முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் காயமடைந்துள்ளதாக கல்வியமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த தாக்குலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், தலிபான் கிளர்ச்சியாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காபூல் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டாஷ்-இல்-பார்ச்சி என்னும் அந்த பகுதியில் ஷியா ஹாசராஸ் பிரிவினர் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் சுன்னி பிரிவு இஸ்லாமியவாதிகளால் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன் இந்த பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மகப்பேறு பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

அடுத்த வாரம் நோன்புப் பெருநாள் என்பதால் அந்த நகரப்பகுதி பரப்பரப்பாக காணப்பட்டதாக அந்நகர செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலையில் ஆண், பெண் என இருபாலரும் கல்வி பயில்கின்றனர். இருப்பினும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள்.

எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானிலுள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெறுவது குறித்து அறிவித்த பின்னர், அங்கு வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை இந்தத் தாக்குதலுடன் தமது இயக்கத்துக்குத் தொடர்புகள் எவையும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதோடு, இந்தச் சம்பவத்தை கண்டித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்