ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது

🕔 May 7, 2021

– பாறுக் ஷிஹான் –

நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் நேற்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி – கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இச்சுற்றிவளைப்பு நடவக்கையினை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் மேற்பார்வையில்  போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அருணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது  சுமார் ரண்டு லட்சத்தி இருபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான 18.01 கிராம்  அளவிலான ஹெரோயின் 13 பொதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், குறித்த போதைப்பொருட்களை தம்வசம்  வைத்திருந்த   தந்தை மற்றும் மகன் இருவரும் கைதாகினர்.

இவ்வாறு கைதாகிய இருவரையும் கல்முனை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில்   போதைப்பொருளுடன் நால்வர்  கைதாகி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments