இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்

🕔 April 30, 2021

புகழ்பெற்ற இந்திய சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 54 ஆகிறது.

கே.வி. ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்றுவந்திருக்கிறார்கள்.

அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், அதிகாலை 03 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக தன் தொழிலைத் தொடங்கியவர், பின் ஒளிப்பதிவின் மீது ஆர்வம் கொண்டு, இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன், அமரன், திருடா திருடா போன்ற பல முக்கிய தமிழ் சினிமாக்களில் கே.வி. ஆனந்த் உதவியாளராக பணி புரிந்தார்.

1994-ம் ஆண்டு வெளியான ‘தேன்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாள திரைப்படத்தில் – தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற முடியாததால், அவ்வாய்ப்பை கே.வி. ஆனந்துக்கு பரிந்துரை செய்தார் பி சி ஸ்ரீராம். இந்த வாய்ப்பை பயன்படுத்திய கே.வி. ஆனந்த் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கு தேசிய விருது வென்று தன் திறமையை நிரூபித்தார்.

அதன் பிறகு முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல முக்கிய தமிழ் சினிமாக்களில் ஒளிப்பதிவாளராக மிளிர்ந்தார். நாயக், மின்னாரம், புன்ய பூமி நா தேசம் என இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற இந்திய மொழி சினிமா துறையிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த ‘கனா கண்டேன்’ படம் மூலம் 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தடம் பதித்தார் கே.வி. ஆனந்த். அதன் பிறகு அயன், கோ, மாற்றான், கவண் என பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

கே.வி. ஆனந்தின் மரணத்துக்கு கார்த்திக் சுப்புராஜ், அல்லு அர்ஜுன், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், கெளதம் கார்த்திக், என திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன், தீப்பெட்டி கணேசன் என கடந்த சில மாதங்களில் திரையுலகினர் பலர் மரணமடைந்தனர்.

Comments