பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

🕔 March 29, 2021

– முன்ஸிப் அஹமட் –

பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்” என, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

“உலகில் முன்னேறிய நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எமது நாடு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று – பெண்களின் முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதாகும்” எனவும் அவர் கூறினார்.

சர்வதே பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை ஆலையடிவேம்பிலுள்ள சுவாட் மண்டபத்தில் நடத்திய நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி, கலாநிதி அனுஷியா சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டொக்டர் அகிலன் தொடர்ந்து பேசுகையில்;

“பெண்களின் முன்னேற்றத்தில் உடல் – உள சார்பான விடயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சுகாதாரமான பிரஜைகளாக பெண்கள் இல்லையென்றால் அவர்களால் முன்னேற்றத்தில் பங்களிக்க முடியாது.

சுகாதார ரீதியாக உள்ள பிரச்சினைகளில் முக்கியமானது பெண்களின் அதிகளவான உடற்பருமனாகும். பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்தில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய்

அடுத்ததாக மிகவும் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பக் கழுத்துப் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இந்தக் காரணங்களால் எமது பிரதேசங்களில் தாய்மார்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோய்களிலிருந்து இலகுவாகப் பாதுகாப்புப் பெற முடியும்.

இந்தப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே நாம் அறிந்து கொண்டால், இதிலிருந்து நமது பெண்களை இலகுவில் பாதுகாக்க முடியும்.

ஆகவே 35, 45 வயதுடைய பெண்கள் அனைவரும் உங்கள் பகுதி மருத்துவ மாதுகளைத் தொடர்பு கொண்டு, அதற்கான முழு பரிசோதனைகளையும் இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் அந்த வகையான புற்றுநோய்களால் மரணத்தை தழுவும் அபாய நிலையும் ஏற்படும்.

குடும்பத்தில் தாய் இறந்தால், அந்தக் குடும்பம் சீரழிந்து விடும் நிலை ஏற்படும். ஒவ்வொரு குடும்பமும் நாட்டின் முக்கியமான அலகுகளாக உள்ளன.

குடும்பமாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை ஆண்கள் தடுப்பார்களாக இருந்தால், அது அவர்களின் அறியாமை என்றுதான் கூறவேண்டும்.

பெண்கள் முன்னேறும் போது, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆண்கள் சுமக்கும் பாரம் குறைகின்றது. எனவே, இதை ஆண்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியு.டி. வீரசிங்க சார்பாக அவரின் சகோதரி மஞ்சுளா, பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் வாணி சைமன், அந்த அமைப்பின் திட்ட இணைப்பாளர்களான எஸ்.கே. வாணி, என். சுமதி, பரமேஸ்வரன் ஜனூசியா, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments