சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

🕔 November 19, 2015

Agilaviraj kariyavasam - 012மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத் துணிகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, அவர்களுக்கு சீருடைகளை நேரடியாக வழங்காமல், அதற்குப் பதிலாக வவுச்சர் வழங்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அதேவேளை, இடைத்தரகர்கள் கொமிஷன் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும், வவுச்சர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு செலவிடலாம் என்றும் அமைச்சஜர் சுட்டிக் காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்ட தகவல்களை அமைச்சர் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்ககையில்;

நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்க கடந்த வருடம் 2.3 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய வேலைத் திட்டத்தின் கீழ் 1.3 மில்லியன் மட்டுமே செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சீருடைகளை வழங்கும் போது அவற்றை உரிய முறையில் பரிசீலிக்காததால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு தரமற்ற ஆடைகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் துணியின் அளவு அதிகமாகவும் உயர் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறைவாகவும் துணிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வழிமுறைகளின் படி பெற்றோருக்கு தமக்கு பிடித்த கடைக்குச் சென்று போதுமான விருப்பமான துணிகளை வாங்கிக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுச்சர் முறையில் பிக்கு மாணவர்களுக்கு 1700 ரூபாவும், தரம் ஒன்று மாணவர்களுக்கு 400 ரூபாவும் அதற்கு மேலதிகமாக 1000, 800, 750, 720 ஆகிய கணக்குகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சில வசதி படைத்த பெற்றோர்கள் அந்த வவுச்சரை பெற விரும்பாவிடில் அவற்றை வறிய மாணவர்களுக்கு வருடத்தில் இரு சீருடையை பெற்றுக் கொள்ளும் வகையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் இந்த வேலைத் திட்டங்களில் ஏதாவது பிரச்சினை இருப்பின் அவற்றை ஆராய ஜனாதிபதி பணிப்புரையின் கீழ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்