காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும்

🕔 February 9, 2021

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகள் தொடர்பில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள் தொடர்பில் திடீர் சோதனைகளை நடத்துவதற்கு, பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காதலர் தினத்தையொட்டி ஒன்றுகூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் திட்டமிடும் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி, இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காதலர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஹோட்டல்கள் அல்லது விருந்தினர் இல்லங்கள் (கெஸ்ட் ஹவுஸ்) பொன்றவை இடமளித்தால், அத்தகைய இடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

ஒன்றுகூடல்கள், திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்