தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல்

🕔 January 30, 2021

கொவிட் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என அவரின் கணவர் காஞ்சன ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர், சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவருக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கணவர் கூறியுள்ளார்.

சுகாதார அமச்சர் சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர் கொண்டதோடு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில் இருந்து, மருத்துவர்கள் அவரை தொற்றுநோய் வைத்தியசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஆபத்தான நிலையில் இல்லை, அவருக்கு கடும் காய்ச்சல் காணப்பட்டது. தாம் மருந்துகளை வழங்க ஆரம்பித்துள்ளதால் அவர் உடல்நிலை தேறி வருகின்றார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள காஞ்சன ஜயரட்ண, அமைச்சருக்கு ஒக்சிசன் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், இரண்டாவது பிசிஆர் சோதனையின் போது தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எவரும் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ள அவர், அமைச்சர் கேகாலை மருத்துவரின் ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்தவில்லை, ஒரு சிறுதுளியை பருகிபபார்த்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அந்த மருந்தினை உரிய சோதனைகளுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார். அவர் அதனை அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவரது கணவர், அமைச்சரோ அல்லது எங்கள் குடும்பமோ அந்த மருந்தினை பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்