துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

🕔 November 14, 2015
France attack - 013
பி
ரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் 06 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்: பிரான்ஸ் ஜனாதிபதி

இதேவேளை, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் ‘திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி பிரங்கொய்ஸ் ஹொலாந்தே இந்தத் தாக்குதல்களை வர்ணித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; வெளியில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்றும், இது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்த போர் என்றும் விபரித்துள்ளார்.

இந்த பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஹொலாந்தே தெரிவித்துள்ளார்.

கொடூர தாக்குதல்கள்

வடக்கு பாரிஸில் உள்ள உதைப்பந்தாட்ட மைதானத்தில் பிரான்ஸ் – ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான தைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தான் கேட்டதாகக் கூறியுள்ளார்.

உதைப்பந்தாட்ட நிகழ்ச்சியைக் காண்பதற்கு, மைதானத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரங்கொய்ஸ் ஹொலாந்தே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாரிஸில் உள்ள பட்டாக்லான் இசையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்தனர்.

மொத்தம் 08 தீவிரவாதிகள் அந்த அரங்குக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களில் 07 பேர் துப்பாக்கி ஏந்தியிருந்தனர். ஒருவர் தற்கொலை குண்டுதாரியாக இருந்தார்.

இவர்கள் மீது படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் குறிப்பிட்ட 08 பேரும் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களும், பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர். இத்தகவலை பிரான்ஸ் அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென, அந்நாட்டு ஜனாதிபதி பிரங்கொய்ஸ் ஹொலாந்தே தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது யுத்தத்தை அறிவிக்கும் தாக்குதல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 04 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் பலியானதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கையருக்கு பாதிப்பில்லை

இந்த தொடர் தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என, பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன், தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும், இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புக்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.தேசிய விளையாட்டு அரங்கு, உணவு விடுதி மற்றும் இசை அரங்கு போன்ற வெவ்வேறான இடங்களில் இத்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரான்சில் தற்போது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை அடுத்து, அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளதுடன் பாரிஸ் நகரிலுள்ள மக்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

France attack - 012

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்