அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை

🕔 January 21, 2021

மெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இலங்கை நேரப்படி நேற்று 10.30 மணியளவில் பதவியேற்றார்.

முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றார்

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கெப்பிட்டால் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

இரு வாரங்களுக்கு முன்னர் டிரம்ப் ஆதரவாளர்களால் இங்குதான் வன்முறை நடத்தப்பட்டது.

வழக்கமாக புதிய ஜனாதிபதியை – முன் வாசல் வழியாக பதவியை இழக்கும் ஜனாதிபதி வரவேற்பார். ஆனால், இந்நிகழ்வில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

1869க்கு பின்னர், தமக்கு பிறகு பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வொஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளி விதிமுறைகளும் அமுலில் இருந்தன.

பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார்கள்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஜோ பைடன் கேட்டுக் கொண்டார்.

பைடன் உரை

“இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்” என்று, பதவியேற்ற பின்னர் – தன் முதல் உரையில் தெரிவித்தார்.

“பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம்” என்று அவர் கூறினார்.

“ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

“சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (கெப்பிட்டால்) வன்முறை வெடித்தது. ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது”.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பேசிய முதல் உரையில், பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குறித்தும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

“180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது” என்று அவர் தெரிவித்தார்.

“எனக்கு வாக்களிக்காதவர்களையும் நான் பாதுகாப்பேன்” என உறுதி கூறுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்