நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம்

🕔 January 19, 2021

– அஹமட் –

னிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் பொருட்களை கொள்வனவு செய்த கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து , அந்த செயலகத்தின் அதிகாரியொருவர் 02 லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை பற்றிய தகவல் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைத்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை நிவாரணமாக வழங்குவதற்காக, 09 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அரசாங்கம் ஒதுக்கியது.

இந்த நிதியின் மூலம், 05 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் – இரண்டு தடவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

குறித்த நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர், தாம் விரும்பிய சில கடைகளில் மட்டும் கொள்வனவு செய்திருந்தனர்.

இவ்வாறு தெரிவு செய்த கடை உரிமையாளர்களில் ஒருவரிடமிருந்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் 02 லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

அக்கரைப்பற்றிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த ‘கார்’ ஒன்றினுள் வைத்து, மேற்படி லஞ்சத் தொகையை – கடை உரிமையாளரிடமிருந்து குறித்த அதிகாரி பெற்றுக் கொண்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ‘கணக்கு வழக்கு’டன் தொடர்புபட்ட அதிகாரியொருவரே இவ்வாறு லஞ்சம் பெற்றுள்ளார்.

இவர் லஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது இவ்வாறிருக்க அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய மேற்படி நிவாரணத்தில் பல்வேறு குறைபாடுகளும், மோசடிகளும் இடம்பெற்றிருந்தமை தொடர்பிலும் ‘புதிது’ செய்தித்தளம் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு

Comments