20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

🕔 January 3, 2021

– ஆர். ராம் –

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் அத்தீர்மானத்தின் சாத்தியப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோது பதிலளித்த ரஊர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் உச்சபீடத்தின் தீர்மானத்துக்கு அமைவாக விளக்கம் கோரியிருந்தோம். அதில் சில உறுப்பினர்கள் தமது தன்னிலை விளக்கங்களை வழங்கியுள்ளார்கள். அனைவரினதும் விளக்கங்களையும் பெற்று கட்சியின் உயர்பீடத்தில் கலந்துரையாடுவதென்று தீர்மானித்துள்ளோம்.

எனினும் கொரோனா சூழலால் கட்சியின் தலைமையகத்துக்கு அனைத்து உச்சபீட உறுப்பினர்களையும் அழைப்பதில் சிரமங்கள் நீடிக்கின்றன. அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்காலத்துக்கு அண்மித்த வகையில் உச்சபீடத்தினை கூட்டுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான ஹாபிஸ் நஸீர் அஹமட், எச்.எச்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக் ஆகியேரே 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments