நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

🕔 December 30, 2020

– பாறுக் ஷிஹான் –

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொன்ற நிலையில், தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில், இவர்கள் நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 06 பேரை ஏற்கனவே பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

கடந்த 26 ஆம் திகதி அன்று மாலை 06 மணியளவில், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில், வீதியில் நின்ற 30 வயதுடைய கணேசமூர்த்தி ரஜிதரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச்செய்து தப்பி சென்றிருந்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  நபர் சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று(29) மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்  படி    சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரி நௌபரின்  வழிகாட்டலில்     குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஏற்கனவே கைதாகிய சந்தேக நபரின் தகவலுக்கமைய தலைமறைவாகி இருந்த மேலும் 5 சந்தேக நபர்களை மத்திய முகாம் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பகுதியில் வைத்து இன்று நள்ளிரவு சம்மாந்துறை குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

Comments