பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

🕔 December 23, 2020

– அஹமட் –

கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு நடவடிக்யொன்று இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் என – பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

இதன்போது பலாத்காரமாக உடல்களை தகனம் செய்வதற்கு எதிரான சுலோகங்களை மேற்படி நடவடிக்கையில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்ததோடு, கபன் சீலைகளை அடையாளப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணிகளையும் தமது கைகளில் கட்டியிருந்தனர்.

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை பலாத்காரமாக எரிக்கும் நடவடிக்கைக்கு முஸ்லிம் சமூகம் தொடர்ச்ச்சியான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு இணங்க, முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காணுமாறு அண்மையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியிருந்தார்.

இருந்த போதும் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உடல்கள் பலாத்காரமாக தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்