அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு

🕔 December 21, 2020

– அஹமட் –

கொரோனா பரவுதல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் இன்று கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில், சபையின் மாதாந்த அமர்வு – பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற போதே, இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை நிவாரணமான வழங்கும் பொருட்டு, 09 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.

இந்த நிதியிலிருந்து 9017 குடும்பங்களுக்கு 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை முதற் கட்டமாக வழங்கியுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தரமற்றவையாக இருந்ததன என்றும், தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை கண்டனப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிவாரண நடவடிக்கையின் போது பழுதடைந்த – மோசமான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், அதிக விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், குறைவான எடையில் பொருட்கள் இருந்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே, இன்றைய தினம் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இது தொடர்பில் கண்டனத் தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்அனைவரும், இந்தக் கண்டனப் பிரேரணைக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்ததக்கது.

குறித்த கண்டனத் தீர்மானத்தின் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதெனவும் இன்றைய சபை அமர்வில் முடிவு செய்யப்பட்டது.

புதிது’ செய்தித்தளத்துக்கு பாராட்டு

இதேவேளை, மேற்படி நிவாரண நடவடிக்கையின் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மேற்கொண்ட மோசடிகளை செய்திகளாக வெளியிட்ட ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ரி. ஆப்தீன் சபையில் உரையாற்றும் போது, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டபோது இடம்பெற்ற மோசடிகளை செய்திகளாக ‘புதிது’ வெளியிட்டதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

Comments