முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

🕔 December 13, 2020

– ஹனீக் அஹமட் –

கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு – கனத்தை மைதான வேலியில் வெள்ளைத் துணியொன்றினை கட்டி, இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும் வெள்ளைத் துணியொன்றினைக் கட்டி, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ‘பேஸ்புக்’ மூலமாகவும் நண்பர்களை அழைத்து, இந்தப் போராட்டத்தை ஒரு சங்கிலித் தொடராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள.

மட்டுமன்றி, ‘stopforcedcremations’ எனும் ‘ஹேஸ்டேக்’ உடன், ‘வெள்ளைத்துணி’ போராட்டப் படங்கள் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்தப் போராட்டம் இன்றைய தினம் பரவலாக முன்னெடுக்கப்பட்டமையையும் காணக்கூடியதாக இருந்தது.

வெள்ளைத்துணி என்பது, நல்லடக்கத்தின் போது முஸ்லிம்களின் மரணித்த உடல்களை சுற்றும் ‘கபன் சீலை’யின் அடையாளமாக உள்ளது.

இதேவேளை, நேற்று கனத்தை மயான வேலியில் தான் வெள்ளைத்துணியைக் கட்டிய படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்துள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா; ‘ ‘ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக மயான கதவினில் அது தொங்கட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் கனத்தை மயானத்தின் வேலியில் இன்று வெள்ளைத்துணி கட்டி, இந்தப் பேராட்டத்தில் இணைந்திருந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்