புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும்

🕔 December 2, 2020

புரெவி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித் துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 07 மணி முதல் 10 வரை – தரை தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து, திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இந்தச் சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட (BUREVI) புரெவி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்புக்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது.

குறிப்பாக அதன் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும்.

இதன்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 85 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல் ஊழியர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது, தற்போது கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கடல் அலையானது ஒரு மீற்றர் அளவுக்கு உயரக் கூடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments