தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில்

🕔 November 3, 2020

– முன்ஸிப் அஹமட் –

லையடிவேம்பு பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாலியை அறுத்துக் கொண்டோடிய திருடன் திரைப்பட பாணியில் சிக்கிய சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

குறித்த திருடன் சில காலமாக பெண்களின் தாலி மற்றும் மாலைகளை இவ்வாறு அறுத்து வந்தவர் என, விசாரணைகளில் இருந்து அறிய முடிவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

அக்கரைப்பற்று – பனங்காடு பிரதேசத்திலிருந்து கணவன், மனைவி, அவர்களின் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஆலையடிவேம்பு நோக்கி நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் பயணித்துள்ளனர்.

இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த திருடன், குறித்த பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளார்.

இதன்போது சம்பந்தப்பட்ட பெண் சத்தமிட்டு கத்தவே, அவரின் கணவர் திருடனை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றிருக்கிறார். இதன்போது மனைவியும், குழந்தையும் மோட்டார் சைக்கிளில்தான் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறித்த திருடனை நெருங்கிய பெண்ணின் கணவர், மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே, திருடனின் மோட்டார் சைக்கிளை உதைத்து தள்ளியுள்ளார்.

இதனால் திருடன் மோட்டார் சைக்கிளிலுடன் கீழே விழுந்து விபத்துக்குளானார். இதேவேளை மோட்டார் சைக்கிளை உதைத்துத் தள்ளியவரும் அவரின் மனைவி மற்றும் குழந்தையுடன் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

இதன்போது முன்னால் வந்த வாகனம் ஒன்றில் திருடனின் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாகத் தெரியவருகிறது. மேலும் கீழே விழுந்து கிடந்த திருடனின் மீது, வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முட்டியதில் அதில் பயணித்தவரும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக மாலையை பறிகொடுத்த பெண், அவரின் கணவர் மற்றும் வீதியால் பயணித்தவர் ஆகியோருடன் திருடனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் அக்கரைப்பற்று வைத்தியசாலையிலும், அவரின் கணவர் கல்முனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த திருடனை கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார், அவரை நேற்றிரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆயினும் அவர் தற்போது அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட திருடனிடமிருந்து, அறுக்கப்பட்ட தாலியுடன், 02 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த திருடனுடன் வந்த மற்றொரு சந்தேக நபர் தப்பியுள்ளதாகவும், அவரை தாங்கள் தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட திருடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங் குற்றப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்