அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

🕔 November 6, 2015

YLS. Hameed - 0988
– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் –

மைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மேற்படி அறிவித்தலைக் கொண்ட கடிதத்தினை நேற்று வியாழக்கிழமை வை.எல்.எஸ். ஹமீட் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அ.இ.மக்கள் காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த வை.எல்.எஸ். ஹமீட், கட்சியிலிருந்தும், செயலாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தப்படுவதாக, அந்தக் கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்திருந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் கொழும்பிலுள்ள ஹோட்டல் கிங்ஸ்பெரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இதனைக் கூறினார்.

இந்த நிலையில், தன்னை  இவ்வாறு இடைநிறுத்துகின்ற அதிகாரம் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு இல்லை எனவும், அவ்வாறு இடை நிறுத்தியமை தொடர்பில், தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றும், வை.எல்.எஸ். ஹமீட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அ.இ.ம.காங்கிரசிலிருந்தும், செயலாளர் பதவியிலிருந்தும் வை.எல்.எஸ். ஹமீட் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன்  தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார். இந்த விடயத்தினை ஒரு சில தினங்களுக்கு முன்னர் வை.எல்.எஸ்.ஹமீடுக்கு தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

ஆயினும், அ.இ.ம.காங்கிரஸ் கட்சியினுடைய யாப்பின் பிரகாரம், தன்னை இடைநிறுத்தும் அதிகாரம் றிசாத் பதியுத்தீனுக்குக் கிடையாது என்றும், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரமும் தேர்தல் ஆணையாளருக்குக் கிடையாது என்றும் வை.எல்.எஸ். ஹமீட் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் றிசாத் அணியினரையும், வை.எல்.எஸ். ஹமீட் அணியினரையும் இவ் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருமாறு, கடந்த 03 ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் அழைத்திருந்தார்.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட வை.எல்.எஸ். ஹமீட், கட்சி யாப்பின் சரத்துக்களை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தெளிவுபடுத்தியதோடு, கட்சியிலிருந்து தன்னை இடைநிறுத்தும் தீர்மானத்தினை எடுக்கின்ற அதிகாரம், றிசாத் பதியுத்தீனுக்கு இல்லை என்றும் வாதிட்டார். மேலும், கட்சியிலிருந்து தன்னை நீக்கியதாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தனக்கு அது தொடர்பாக எதுவித எழுத்துமூல அறிவித்தலும்  அனுப்பப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையாளரிடம் ஹமீட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தல் ஆணையாளர் செயற்பட வேண்டிய சட்டப்பிரிவுகளை ஹமீட் எடுத்துக் கூறியதோடு, இவ்வாறு பிழையாக அனுப்பப்படுகின்ற கடிதங்களை, குறித்த சட்டப் பிரிவுகள் அனுமதிக்கவில்லை என்பதையும் தேர்தல் ஆணையாளருக்கு ஹமீட் சுட்டிக்காட்டியதாகத் தெரியவருகிறது.

எனவே, அ.இ.ம.காங்கிரசிலிருந்து தன்னை இடைநிறுத்தியதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில், தேர்தல் ஆணையாளருடைய நிலைப்பாட்டை எழுத்து மூலம் தனக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதன்போது ஹமீட் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையிலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம் என்று தேர்தல் ஆணையாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments