றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல்

🕔 October 16, 2020

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை லோரன்ஸ் ராமநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், தான் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி றியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு, இன்று வெள்ளிக்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது றியாஜ் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குறித்த மனு அவசர தேவை கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் அதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து எதிர்வரும் 20ஆம் திகதி, குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்று தீர்மானித்துள்ளது.

Comments