கடலில் எரியும் கப்பல், வெடித்துச் சிதறும் அபாயம்; முன்னாயத்த நடவடிக்கை குறித்து அம்பாறை மாவட்ட செயலகம் அறிவுறுத்தல்

🕔 September 4, 2020

ம்பாறை மாவட்டம் – சங்கமன் கந்தை கடற்பகுதியில் தீப்பிடித்து எரியும் மசகு எண்ணெய் கப்பல், வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகம் பொதுமக்களை எச்சரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

‘மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசரகால முன்னாயத்த செயற்பாடுகள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், குறித்த கப்பல் வெடிக்கும் பட்சத்தில் பின்வரும் அபாயங்கள் ஏற்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை;
01) கடல் நீர்ப்பெருக்கு தரையை நோக்கி வரும்.
02) கடல் தொழில் வள்ளம் மற்றும் போட் ஒன்றுடன் ஒன்று மோதி உடையும்.
03) சூழல் மற்றும் நீர்நிலை மாசடையும்.
04) மீனவர் தொழில் பாதிப்பு மற்றும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்.

இவ்வாறான சூழ்நிலையில் இருந்து பொதுமக்களையம் சூழலையும் பாதுகாப்பதற்காக, பின்வரும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அவை;
01) கரையோர மக்களையும் மீனவர்களையும் விழிப்பூட்டுதல், மற்றும் விழிப்பாக இருக்க அறிவுறுத்துதல்.
02) கடல் மற்றும் தரையில் உள்ள வள்ளங்கள் மற்றும் போட்களை ஒன்றுடன் ஒன்று மோதாமல் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்தல்.
03) அரசு செய்திகளை தொடர்ச்சியாக கேட்டு செயற்படுவதற்கான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்குதல்.
04) அனர்ந்த நேரங்களில் வேடிக்கை பார்ப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
05) கரையோர பிரதேசங்களில் உள்ள மக்களில் வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பமடைந்தோர் மற்றும் விசேட தேவையுடையோர் விடயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.
06) கடலில் மசகு எண்ணெய் கொள்கலன் வெடித்துச் சிதறுமாயின், மசகு எண்ணெயை கடலில் இருந்து அகற்றுவதற்கு முப்படையினர் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முழுமையான ஒத்துறைப்பை பிரதேச செயலகம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் வழங்குதல் வேண்டும். குறிப்பாக தொண்டர் சேவை மற்றும் தேவையான உபகரணங்களை தற்காலிகமாக வழங்கி மீளப்பெற்றுக் கொள்ளல்.

தொடர்பான செய்தி: அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து

Comments