பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

🕔 July 9, 2020

– அஹமட் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னம் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர்; தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய சில வேட்பாளர்களை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் சில வேட்பாளர்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும், இது குறித்து மு.காங்கிரஸ் தலைவருக்கு அவர்கள் முறையிட்டுள்ளதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

குறிப்பாக, முன்ளாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். தவம் ஆகிய வேட்பாளர்களை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என, நஸீர் அச்சுறுத்தி செய்தியனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.

நஸீரின் இந்த தீர்மானம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸில் அண்மையில் இணைந்து கொண்டவரும் கிழக்கு மாகாண முன்னாள அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பையும் கடும் அதிருப்பதியில் உள்ளார் எனவும் அறியக் கிடைக்கிறது. உதுமாலெப்பையின் சொந்த ஊரும் அட்டாளைச்சேனை என்பது குறிப்பிடத்தக்கது.

“எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அட்டாளைச்சேனைக்குள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதோடு, வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கின்றனர். ஆனால், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, அட்டாளைச்சேனைக்கு வரவேண்டாம் என நஸீர் கதவடைக்க முயற்சிப்பது, மிக மோசமான ஜனநாயக அத்துமீறலாகும்” என்று, இவ்விடயம் குறித்து ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தகவல் வழங்கிய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர் ஒருவர் கூறினார்.

அதேவேளை, “நஸீர் போன்றவர்கள் விருப்பு வாக்குகளை அதிகம் பெற வேண்டும் என நினைத்து – நடத்தும் இதுபோன்ற வெட்டுக் குத்து அரசியலால், தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு விடும்” எனவும் அந்த பிரமுகர் கவலை தெரிவித்தார்.

மேலும், “கடந்த அரசாங்க காலத்தில் அட்டாளைச்சேனைக்கு சுமார் 15 கோடி ரூபாய் நிதியில் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், அந்த ஊர் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு எல்லா வகையிலும் உரிமை உள்ளவர்” என்றும், மேற்படி மு.கா. பிரமுகர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், அட்டாளைச்சேனையில் இன்று விழயாழக்கிழமை இரவு பைசால் காசிம் கலந்து கொள்ளும் சிறியதொரு கூட்டம் ஏற்படாகியிருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் 13ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வருகை தரவுள்ளதாகவும், இதன்போது நஸீர் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மு.கா. தலைவர் விசாரிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்