தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி

🕔 June 24, 2020

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில்,  அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவவ்வா உயிரிழந்தார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மரணமடைந்த இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழி பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவராவார்.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியூலன்ஸ், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று, மீண்டும் வைத்தியசாலைக்குத் திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தோப்பூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த மேற்படி இளைஞன் அம்பியூலன்ஸில் மோதி படுகாயமடைந்த நிலையில், மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய அம்பியூலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments