விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்
லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு வாய் மொழி மூலம் அறிவித்துள்ளேன். இது தொடர்பில் இன்று (29ஆம் திகதி) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளேன்” எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள நிலையில் பிரதேச செயலாளருக்கு எதிராக உள்ளக ரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் கூறினார்.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு பதில் செயலாளரொருவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதன் மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். உதயகுமார் ஆகியோரை நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து வந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
நன்றி: விடியல்
தொடர்பான செய்தி: லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி?