திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

🕔 April 18, 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன் பின்னர் – மீண்டும் அறிவிக்கப்படும் வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் – அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கள், தொடக்கம் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் – பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 22ஆம் திகதி, புதன் தொடக்கம் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் பொலிஸ் பிரிவுகள் வருமாறு;

கொழும்பு மாவட்டம்: கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மரதானை, கொதடுவ, முல்லேரியா, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவலை.

கம்பஹா மாவட்டம்: ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை

புத்தளம் மாவட்டம்: புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை

களுத்துறை மாவட்டம்: பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை

இந்த வகையில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைச்சேனை, மரதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹுவலை, ஜாஎலை, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவிலை, வென்னப்புவை, பண்டாரகமை, பயாகலை, பேருவளை, அளுத்கமை, வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் நோய்த்தொற்று அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய பிரதேசமாக இனம்காணப்பட்டால், அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாகத் தடைசெய்யப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்