போலி நாணயம் உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை
– க.கிஷாந்தன் –
கண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை, நேற்று திங்கட்கிழமை கண்டி பொலிஸார் முற்றுகையிட்டனர்.
சட்டவிரோதமான அச்சிடப்பட்ட 06 போலி இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களும், ஆயிரம் ரூபா நோட்டுக்கள் 19 மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சட்டவிரோத நிலையத்தில் போலி பண நோட்டுக்கள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் மட்டுமன்றி பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், வாகன அனுமதிப் பத்திரச் சான்றிதழ் மற்றும் காப்புறுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்கள் போலியாக அச்சிடப்பட்டுள்ளன.
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு குலுக்கலின்போது தெரிவுசெய்யப்படும் இலக்கத்தை அடுத்தநாள் அச்சிட்டு, அதனூடாக ஏமாற்றி 10 ஆயிரம் ரூபா வரையில், சந்தேக நபர்கள் பணம் பெற்றிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட அச்சு இயந்திரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.