தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக கருணா அம்மான் தெரிவிப்பு; சிங்களக் கட்சியில் போட்டியிடத் தயாரில்லையாம்

🕔 October 26, 2015
Karuna - 01புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக்ஷ  அரசின் அமைச்சருமான கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, தான் போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா அம்மான், மகிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டார். இதன்போது,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டது.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ அரசில் கருணா அம்மானுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், கூடவே அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டன.

ஆயினும், கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதும், இவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியபோதும், அதுவும் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக, கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்;

“தமிழர் விடுதலைக் கூட்டணியானது பாரம்பரியமான கட்சியாகும். இது தமிழர்களின் தாய்க்கட்சி. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் 04 கட்டப் பேச்சுக்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணியினைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. போர் காரணமாக அந்தக் கட்சியில் சில பிளவுகள் ஏற்பட்டிருந்தன. அதனால் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. சிங்களக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நான் இனித் தயாரில்லை. அதனால் உள்ளுராட்சித் தேர்தலின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்