யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன்

🕔 October 26, 2015
– அஸ்ரப் ஏ. சமத் –

நாட்டில் பாரிய யுத்தமொன்று ஏற்படுவதற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவைளை, “நமது நாட்டில் பத்துக்கு மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் இல்லை. சிங்களம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகள்தான் உள்ளன.  நம்மிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சினையை, நாம் அன்றே, பேசித் தீா்த்திருக்க முடியும். இவ்வாறு பிரச்சினையைத் தீர்த்திருந்தால், ஜெனீவா வரை இந்தப் பிரச்சினை சென்றிருக்காது” என்றும் அவர் கூறினார்.

மொழிப்  பயிற்சியை முடித்துக் கொண்டோருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், ராஜக்கிரியவையில் உள்ள அரச  கரும மொழிகள் திணக்களத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“எனக்கு இரண்டு மொழிகளும் தெரியும். நான் யட்டியந்தோடையில் பிறந்தவன். கண்டியில்  கல்வி கற்றேன். ஏனைய சமுகங்களோடு நட்புறவை வளா்க்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமரும் இன நல்லிணக்க அமைச்சினை என்னிடம் ஒப்படைத்துள்ளனா்.  இந்த நாட்டில் இரண்டு மொழிகளும், அரச மொழிப் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

எனக்குத் தரப்பட்டுள்ள அமைச்சின் கீழ் நான்கு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம்தான் அரச கரும மொழிகள் திணைக்களமாகும்.  இந்த நிறுவனத்தின் மூலம் 06 மாத காலத்திற்குள் வழங்கும் மொழியறிவுப் பயிற்சி போதாது. அதற்காக சிறு தொகை அறவிடுவதையும் நான் விரும்பவில்லை. இந்தப் பயிற்சியை இலவசமாக வழங்க வேண்டும். இம் மொழிப் பயிற்சிகள்  நாடு பூராவும் விஸ்தரிக்கப்படல் வேண்டும். அத்துடன் மொழிப் பயிற்சி நிறுவனத்தை மொழிக் கல்லூயாகத் தரமுயர்த்தி, மொழியியல் பட்டப்படிப்பு வரை முன்னேற்ற திட்டம் வகுத்துள்ளேன்.

அத்துடன் அரச பல்கலைக்கழகத்திலுள்ள மற்றும் பாடசாலைவிட்டு விலகிய  சிங்கள மாணவா்கள் தமிழையும்,  தமிழ் மாணவா்கள் சிங்களத்தையும் முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கும் பல திட்டங்களை எனது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த உள்ளேன். தெற்கில் வசிப்பவா் வடக்குக்குச் சென்று தமிழில் பேசி ஒரு அலுவலகத்தில் தமது அலுவல்களை முடிக்கவும், வடக்கில் வசிப்பவா் தெற்குக்கு வந்து, தமது அலுவல்களை முடித்துக் கொள்ளவும் மொழித் திறன்கள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.

கடந்த 2009 மே மாதம் 29ஆம் திகதி இலங்கை வந்த ஜ.நா. செயலாளா் நாயகம் பான் கி மூன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து ஒன்றுபட்டு தெரிவித்த கருத்தின் பின்பே, ஜெனிவாவில் மனித உரிமை பிரேரேரனை உருவாக்கப்பட்டது.  யுத்தம் முடிவடைந்தபின்  தமிழ் மக்களது பிரச்சினைகள், அவா்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள் தீா்க்கப்படவில்லை. அதனால்தான், இந்தப் பிரச்சினையை சுலபாமாக தீா்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை ஒன்றிணைப்பதற்கும், யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்,  ரானணுவத்தினா்கள் என்று, எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவா்களின்  துக்கங்களைப் பகிா்ந்து கொண்டு, ஒரு நல்லிணக்க சமுகத்தினை உருவாக்குவதற்கு எனது அமைச்சின் ஊடாக நான் பாடுபடுவேன்” என்றார்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா்  பேல் வீரசிங்க, அரச கரும  மொழிகள் திணைக்கள ஆணையாளா் சட்டத்தரணி டப்பிள்யு.ஏ. ஜயவிக்கிரமவும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments